நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கட்டைப்பையுடன் வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், திடீரென அதிலிருந்த காகிதங்களைத் தரையில் கொட்டிய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேதாரண்யம் வட்டம், வெள்ளப்பள்ளம் வாணவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் ஆவார். கடந்த 8 ஆண்டுகளாகத் தான் அளித்த கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் அந்தப் பையில் சேகரித்து எடுத்து வந்து, அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கும் வகையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொட்டித் தனது வேதனையைப் பதிவு செய்தார்.
தமிழ்ச்செல்வனின் மனைவி பெயரில் இருந்த பட்டா நிலத்தை, அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துத் தனது பெயருக்குப் பட்டா மாற்றம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இழந்த நிலத்தை மீட்டுத் தருமாறு கிராம நிர்வாக அலுவலர் (VAO) முதல் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்கள் வரை கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமிழ்ச்செல்வன் தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளருக்குச் சாதகமாகச் செயல்படுவதுடன், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததற்காகத் தன்னை அலைக்கழிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவரை மூன்று மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்ச்செல்வன், தற்போது ஒரு உருக்கமான முடிவை எடுத்துள்ளார். அதிகாரிகளின் தொடர் அலைக்கழிப்பால் தினம் தினம் வேதனைப்படுவதை விட, தன்னை ஒரேடியாகக் கருணைக் கொலை செய்துவிடுமாறு கோரி மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் புதிய மனு ஒன்றை அவர் வழங்கியுள்ளார்.
தனது உரிமையான நிலத்தை மீட்க எட்டு ஆண்டுகளாகப் போராடியும் நீதி கிடைக்காத விரக்தியில், மாற்றுத்திறனாளி ஒருவர் கருணைக் கொலை அனுமதி கோரியிருப்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இனியாவது மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தித் தமிழ்ச்செல்வனுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
