தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (47). தச்சுத் தொழிலாளியான இவருக்கு மனைவி தேவகனியா மற்றும் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். செந்தில்குமாரின் இரண்டாவது மகள் கீர்த்திகாவும், அவரது உறவினரான சிவக்குமாரின் மூத்த மகன் ரூபனும் காதலித்து வந்துள்ளனர். இரு குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டு கேரளாவில் குடியேறினர். இந்தத் திருமண விவகாரத்தால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் முன்விரோதம் நிலவி வந்தது.
இந்நிலையில், சிவக்குமாரின் இளைய மகன் யோகேஷ்வரன், செந்தில்குமார் குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஊருக்கு வரும்போது பிரச்சினை செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், சிவக்குமார் வசிக்கும் தெருவுக்குச் சென்று இது குறித்துக் கேட்டுள்ளார். அப்போது செந்தில்குமாருக்கும், அங்கிருந்த சிவக்குமார், அவரது மனைவி அனிதா மற்றும் மகன் யோகேஷ்வரன் ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
மோதல் முற்றிய நிலையில், சிவக்குமாரும் அவரது மகன் யோகேஷ்வரனும் சேர்ந்து செந்தில்குமாரை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் பின்கழுத்து, நெஞ்சு மற்றும் நெற்றியில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த மோதலில் காயமடைந்த சிவக்குமார், அனிதா, யோகேஷ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்த கடமலைக்குண்டு காவல்துறையினர், அவர்களைச் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். செந்தில்குமாரின் மனைவி தேவகனியா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மகளின் காதல் திருமணத்தால் மூண்ட குடும்பப் பகை, தந்தையின் கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
