தமிழ் சினிமாவில் சில காம்போக்கள் எவர்கிரினாக அமைந்துவிடும். அப்படி இளையராஜா வைரமுத்து கூட்டணிக்குப் பிறகு சூப்பர் ஹிட் கூட்டணியாக அமைந்தது ந முத்துகுமார் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி. யுவனின் திரை வாழ்க்கையில் அவரோடு பல படங்களில் இணைந்து பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் மறைந்த பாடல் ஆசிரியர் நா முத்துகுமார்.
அவர்கள் இணைந்து பணிபுரிந்த 7 ஜி ரெயின்போ காலணி, கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட ஏராளமான படங்களின் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன். யுவனோடு மட்டும் இல்லாமல் முத்துகுமார் இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி வி பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகிய பல தலைமுறை இசையமைப்பாளர்களோடும் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

#image_title
முத்துக்குமார் பாடல் எழுதிய போது அவர்தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் அதிக பாடல்கள் எழுதிய பாடல் ஆசிரியர் என்ற சாதனையைப் படைத்தார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறந்த பாடலுக்கான தேசிய விருதைப் பெற்றார். இப்படி உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த முத்துகுமார் மிக இளம் வயதிலேயே மஞ்சள் காமாலை காரணமாக உயிரிழந்தது தமிழ் சினிமா பாடல் ரசிகர்களுக்குதான் பேரிழப்பு.
இந்நிலையில் நா முத்துகுமார் ஆயிரக் கணக்கான பாடல்களை மட்டும் எழுதாமல் கிரீடம் படத்துக்கு வசனங்களையும் எழுதியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள முத்துகுமார் “இயக்குனர் விஜய், என் நண்பர் என்பதால் அந்த படத்துக்கு வசனம் எழுதினேன். ஆனால் பலபேர் கேட்டும் தொடர்ந்து என்னால் வசனங்கள் எழுத முடியவில்லை. அதற்குக் காரணம் எனக்கு நேரமின்மைதான்” என உயிரிழப்பதற்கு முந்தைய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
