தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார். இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார். இவர் படங்களில் வசனங்களை விட காட்சிப்பூர்வமான அர்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.
அதனால் அவர் படக்காட்சிகளைப் பார்த்தாலே அது அவருடைய படம்தான் என்பதை ஒரு திரைப்பட பார்வையாளானால் புரிந்துகொள்ள முடியும். இப்படி மிஷ்கின் தொடர்ச்சியாக நல்ல படங்களைக் கொடுத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் சொதப்பியதும் உண்டு. தற்போது அவர் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் ரிலீஸாகாமலும், ட்ரெய்ன் படம் இறுதி கட்டத்திலும் உள்ளன.
மிஷ்கினின் படங்களைப் போலவே அவரது நேர்காணல்களும் சுவாரஸ்யமாகவும் ஆழமான அர்த்தம் கொண்டவையும். சில மாதங்களுக்கு முன்னர் மிஷ்கின் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னால் தன் தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தைக் குறித்தும் அதை எப்படி தான் திரையில் கொண்டுவந்தேன் என்பதைப் பற்றியும் பேசியுள்ளார்.

அதில் “நான் பத்தாவது பரீட்சையில் பெயில் ஆகிவிட்டேன். எனக்கு பரீட்சை போர் அடித்துவிட்டது. அதனால் பத்து நிமிஷத்திலேயே பேப்பரைக் கொடுத்துவிட்டேன். ஆனால் நான் முதல் ரேங்க் எடுக்கும் மாணவன். என் அப்பா ஆசை ஆசையாக என் ரிசல்ட்டைப் பார்க்க போனார். நான் பெயில் என்று தெரிந்ததும் அவர் போன இடத்தில் எங்கேயோ செருப்பை விட்டுவிட்டு வெறும் காலோடு வீட்டுக்கு நடந்து வந்தார்.
அஞ்சாதே படத்தில் கிருபாகரன் போலீஸால் கைது செய்யப்படும் போது, அவன் தந்தை கதாபாத்திரம் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் போது காலில் செருப்பில்லாமல் வரும். என் அப்பாவுக்கு நடந்ததை சொல்லிதான் நான் லிவிங்ஸ்டன் சாரிடம் அந்த காட்சியில் நடிக்க வைத்தேன்” எனக் கூறியுள்ளார்.
