“மயிலாப்பூர் ஆசிரியை.. ராயப்பேட்டை காதலன்”…. நடுரோட்டில் நடந்த பகீர் கடத்தல்…. பின்னணியில் இருந்த ‘அந்த’ ட்விஸ்ட்…!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பாலன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றிய மோனிகாவதி என்பவருடன் பாலனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த பாலனுக்கும், மோனிகாவதிக்கும் இடையே ஏற்பட்ட இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. மோனிகாவதி அடிக்கடி பாலனின் வீட்டிற்குச் சென்று தங்கி வந்ததாகவும், அந்த சமயத்தில் பாலன் அவருக்கு நகைகளும், லட்சக்கணக்கில் பணமும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென மோனிகாவதி தனது ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, அம்பத்தூரில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். அதோடு பாலனுடனான தொடர்பையும் துண்டித்துக் கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலன், மோனிகாவதியைச் சந்திக்க முயன்றும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, தான் கொடுத்த 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தருமாறு பாலன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோனிகாவதி, தனது நண்பர்கள் மூலம் பாலனைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.

   

இதன்படி, அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்ட தனது நண்பர்கள் மூவரின் உதவியுடன் பாலனை மோனிகாவதி கடத்தியுள்ளார். கடத்தப்பட்ட பாலனை அவர்கள் அடித்துத் துன்புறுத்தியதுடன், கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து பாலன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கடத்தலுக்கு உதவிய அரசியல் பிரமுகர்கள் கானா ஆறுமுகம், குமார், நவீன்குமார் மற்றும் ஆசிரியை மோனிகாவதி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

   

இந்த வழக்கில் மற்றொரு திருப்பமாக, ஆசிரியை மோனிகாவதியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலன் ஆசிரியையின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஒரு பக்கம் காதலனை ஆசிரியை கடத்தியதாகப் புகார் எழுந்தாலும், மறுபக்கம் ஆசிரியை தரப்பிலிருந்தும் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.