மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில் பரவிய விசித்திரமான வதந்தியை நம்பி, 17 வயது சிறுவன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேனா மற்றும் சாவி கொத்துகளை விற்று ஏழ்மை நிலையில் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்த ரிகான் என்ற சிறுவனே இந்த கொடூர சம்பவத்திற்கு பலியாகியுள்ளான். பிபிஏ மாணவன் ஒருவன் தான் ஒரு மருத்துவர் என பொய் வேடமிட்டு, மனித விந்தகங்களை விற்றால் ரூ.1.20 கோடி வரை பெறலாம் என்ற பொய்யான தகவலை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாகத் தன் நண்பர்களை நம்ப வைத்துள்ளான்.
பண ஆசையால் தூண்டப்பட்ட அந்த கும்பல், கடந்த ஆகஸ்ட் 6 அன்று நூறு ரூபாய் தருவதாக ஆசை காட்டி ரிகானை தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளது. தொடர்ந்து, சடலத்திலிருந்து உறுப்பை அகற்றி விற்பனை செய்ய முயன்றபோதுதான், அப்படி ஒரு மருத்துவ ஆதாரமோ அல்லது அதை வாங்குவதற்கான வாடிக்கையாளரோ இல்லை என்ற அதிர்ச்சி உண்மை அவர்களுக்கு தெரியவந்துள்ளது. வாங்குபவர் யாரும் கிடைக்காததால், அந்த உறுப்பை அருகில் இருந்த குளத்தில் வீசிவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
ஆகஸ்ட் 10 அன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதில் காவல்துறைக்குத் தொடக்கத்தில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், போலி மருத்துவரான ஜோஹேப் கான் மற்றும் ஆமீர் குரேஷி உட்பட ஐந்து பேரை அதிரடியாகக் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் பரவும் போலி வதந்திகளால் ஒரு ஏழைச் சிறுவனின் உயிர் பறிபோன இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
