ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஞ்சசீல் காலனி பகுதியில், 6 மாத கர்ப்பிணியான நேகா குமாரி (24) என்ற இளம்பெண் அவரது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நேகா குமாரியும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமித் குப்தா என்பவரும் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டு, தற்போது பஞ்சசீல் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அமித் குப்தா, சமீப நாட்களாக ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரைத் தவறாமல் வேலைக்குச் செல்லுமாறு நேகா அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தால் கணவன்-மனைவி இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அமித் குப்தா, கர்ப்பிணி என்றும் பாராமல் தனது மனைவியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். பின்னர் அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரிக்க முயன்றதோடு, வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் நேகாவின் தலையை பலமுறை முக்கி, கொடூரமான முறையில் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்த பின்னர், அமித் தனது மாமாவுக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, “நான் என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன், இனி அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். நேகாவின் உறவினர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்று, அழைப்பை ஏற்காததால் நேரில் வந்து பார்த்தபோதுதான் அவர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லா காவல் துறையினர், தடய அறிவியல் மற்றும் குற்றப்பிரிவு குழுவினருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவாக உள்ள அமித் குப்தாவை வலைவீசித் தேடி வருகின்றனர்.
