திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த காவல்காரன்பட்டியைச் சேர்ந்த 51 வயதான சிவசுப்பிரமணியன், அப்பகுதியில் சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இரவு, வழக்கம்போல் தனது வீட்டின் வெளியே உள்ள கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அவர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிவசுப்பிரமணியனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலை தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு இளைஞர் இரும்பு கம்பியுடன் நடமாடியது தெரியவந்தது. இதன் அடிப்படையில் 25 வயதான ராதாகிருஷ்ணன் என்பவரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராதாகிருஷ்ணன் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியைக் காதலித்து வந்ததும், சிவசுப்பிரமணியன் அவர்களின் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது. வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் காதலிப்பதைக் கண்டித்த சிவசுப்பிரமணியன், காதலைக் கைவிடாவிட்டால் சிறுமியின் வீட்டில் கூறிவிடுவேன் என எச்சரித்துள்ளார்.
சிவசுப்பிரமணியனின் எச்சரிக்கையால் ஆத்திரமடைந்த 15 வயது சிறுமியும், ராதாகிருஷ்ணனும் சேர்ந்து அவரைத் தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, சிவசுப்பிரமணியன் வீட்டின் வெளியே தனியாகப் படுத்து உறங்குவதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ராதாகிருஷ்ணன், தனது நண்பர்களான சேரன் மற்றும் சிவநேசன் ஆகியோரின் உதவியுடன் இரும்பு கம்பியால் சிவசுப்பிரமணியனை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்செயலுக்கு அந்தச் சிறுமியும் உடந்தையாக இருந்து வழிகாட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்குத் திட்டம் தீட்டிய 15 வயது சிறுமியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வெறும் காதல் விவகாரத்திற்காக ஒரு தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
