தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். 1987 முதல் 1990 வரை பிஸியான நடிகராக இருந்தார். அப்போது அவரின் தங்கமான ராசா திரைப்படம் ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் வசூலையே தாண்டியதாம். ஆனால் 90 களுக்குப் பிறகு ராமராஜனின் மார்க்கெட் சரிய ஆரம்பித்துள்ளது.
ராமராஜனின் சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததே ஒரு இன்ப விபத்துதான். ராமராஜன்(அப்போது குமரேசன்) மதுரை மேலூரில் இருக்கும் ஒரு தியேட்டரில் டிக்கட் கிழிக்கும் வேலை செய்து வந்தார். அந்த தியேட்டர் ஓனர் மூலமாக சென்னை வந்து இராமநாராயணன் ஆபிஸ்ல ஆபிஸ் பாயா வேலை பார்தவர் அவரிடமே உதவி இயக்குனர் ஆனார்.
அப்படி 40 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக வேலை செய்த அவர் இதுவரை 11 படங்களை இயக்கியும் உள்ளார். இது பலரும் அறியாத தகவல். 1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் கையைக் கடிக்காத அளவுக்கு ஓடி, அவரை ஒரு இயக்குனராக நிலைநிறுத்தின.
அப்போதுதான் அவருக்கு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. தான் இயக்கும் படங்கள் 100 நாட்கள் ஓடவில்லையே என்ற ஏக்கமும், தான் சினிமாவுக்கு நடிக்கதானே வந்தோம் என்ற பழைய ஆசையும் சேர்ந்து அவரை ஹீரோவாக நடிக்க ஒத்துக் கொள்ளவைத்துள்ளது.
ஆனால் இந்த படத்தில் அவர் நடிகராவதற்கு முக்கியக் காரணமே, நடிகர் முரளிதானாம். ஏனென்றால் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படம் முதலில் உண்மைகள் உறங்குகின்றன என்ற பெயரில் உருவாக இருந்துள்ளது. அதில் முரளியும், ரேவதியும் நடிக்க இருந்தார்களாம். ஆனால் அப்போது முரளியிடம் கால்ஷீட் இல்லாததால்தான் ராமராஜனை ஹீரோவாக்கலாம் என தயாரிப்பாளரும் இயக்குனரும் முடிவு செய்துள்ளனர். அப்படிதான் ராமராஜனின் திரை வாழ்வு திருப்புமுனைக்கு முரளி தானறியாமலேயே ஒரு காரணமாக இருந்துள்ளார்.
