லண்டனில் வசித்து வரும் இந்தியரான ஜெய் தோலக்கியா என்பவர், அங்குள்ள ஒரு முக்கியத் தெருவில் எதிர்பாராத விதமாக இந்திய ஆட்டோ ரிக்ஷா ஒன்று செல்வதைக் கண்டு வியப்படைந்துள்ளார். நம் ஊர் சாலைகளில் சாதாரணமாகக் காணப்படும் ஆட்டோ, லண்டன் மாநகர வீதியில் வலம் வந்த அந்த விசித்திரமான காட்சியை அவர் உடனடியாகத் தன் மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்தார். இந்த வீடியோவை அவர் சமூக ஊடகங்களில் பகிர, அது தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து படுவைரலாகி வருகிறது.
இந்த ஆட்டோ வீடியோவை லண்டன் மற்றும் பிற நாடுகளில் வாழும் இந்தியர்கள் நெகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து ரசித்து வருகின்றனர். பலருக்கு இந்த வீடியோ தங்களின் இந்திய வாழ்க்கையையும், ஆட்டோ பயணங்களையும் நினைவூட்டி ஏக்கம் கொள்ளச் செய்துள்ளது. வீடியோவைப் பார்த்த பயனர் ஒருவர், “நான் இங்கு ஆட்டோவிற்காக மணிக்கணக்கில் காத்திருக்கிறேன், லண்டனில் ஒரு ஆட்டோ கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று ஏக்கத்துடன் பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, “லண்டனிலும் ஆட்டோ சேவை வந்தால் மக்களுக்கு பயணக் கட்டணம் எவ்வளவு மிச்சமாகும்!” என நிஜமாகவே கணக்குப் போடத் தொடங்கிவிட்டார்.
https://www.instagram.com/reel/DWMobvaCfTb/?utm_source=ig_web_button_share_sheet
இதற்கிடையில், இந்த ஆட்டோ இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்பது குறித்து நெட்டிசன்களிடையே ஒரு சுவாரசியமான விவாதமே கிளம்பியுள்ளது. அந்த ஆட்டோ கருப்பு மற்றும் மஞ்சள் நிறக் கலவையில் காட்சியளிப்பதால், இது கண்டிப்பாக மும்பை நகரின் அடையாளமான ‘மும்பை ஆட்டோ’ தான் என்று பலரும் அடித்துக் கூறி வருகின்றனர். லண்டன் மாநகரத்துக்கே ‘இந்தியா டச்’ கொடுத்த இந்த ஆட்டோ வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகிறது.
