உத்தரபிரதேசம் மீரட் அருகேயுள்ள ராம்ராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர் குர்சேவக், இவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குர்பிரீத் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது 7 வயது மகன் அங்கத்வீர், பாட்டியுடன் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் தங்கி படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிறுவனும் அவனது பாட்டியும் கிராமத்திலுள்ள தங்களது சொந்த வீட்டிற்கு வந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் முன்பு விளையாடச் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு வாலிபர் சிறுவனை காரில் கடத்திச் செல்வது தெரியவந்தது. அந்த காரின் எண்ணை வைத்து, எச்டிஎப்சி (HDFC) வங்கியில் பணிபுரியும் அங்கித் சர்மா என்ற வாலிபரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவருக்கும் சிறுவனின் தாயாருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும், அவர் குர்பிரீத்தை திருமணம் செய்ய ஆசைப்பட்டதும் தெரியவந்தது. தங்களது காதலுக்கு அச்சிறுவன் இடையூறாக இருப்பான் என்று கருதிய அங்கித் சர்மா, விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் கடத்திச் சென்று, கால்வாயில் உயிரோடு மூழ்கடித்துக் கொடூரமாகக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின்படி சிறுவனின் உடல் கால்வாய் கரையிலிருந்து மீட்கப்பட்டது.
சமீபகாலமாக, கள்ளக்காதல் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளின் காரணமாக, பெற்ற பிள்ளைகளையே தாயோ அல்லது அவர்களது கள்ளக்காதலனோ கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்னதாக, இதே மீரட் மாவட்டத்தின் முண்டாலி கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறால், ஒரு தாய் தனது 7 மாதக் குழந்தையைத் கழுத்தை நெரித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது. கள்ளக்காதல் என்ற போதை, பெற்ற பிள்ளைகளின் உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சமுதாயத்தில் மிக மோசமான குற்றங்களை உருவாக்கி வருகிறது என்பதற்கு இச்சம்பவங்களே சாட்சியாகும்.
