மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஐயம்மாள் என்ற தாய், தனது மகனைத் தானே அடித்துக் கொன்று வீட்டின் அருகே புதைத்ததாகக் கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்துள்ள வாக்குமூலம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐயம்மாளின் மகன் ராஜா (32) தீவிர மது மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், ராஜா மீது பல குற்ற வழக்குகளும் நிலுவையில் இருந்துள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடும் போதையில் வீட்டிற்கு வந்த ராஜா, தாய் ஐயம்மாளிடம் பணம் கேட்டு மிரட்டி, அவரைத் தகாத முறையில் நடத்த முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஐயம்மாள், தற்காப்பிற்காக மகனைக் கீழே தள்ளிவிட்டு அருகில் இருந்த இரும்புக் கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியதில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், வீட்டின் அருகே கழிவறைக்காகத் தோண்டப்பட்டிருந்த குழியில் உடலைப் புதைத்துவிட்டு, மகன் காணவில்லை என்று நாடகமாடி வந்தார். கிராம மக்களின் சந்தேகம் மற்றும் போலீஸாரின் கண்காணிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, மன உளைச்சலுக்கு ஆளான ஐயம்மாள் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
