கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அழகுவேல். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 7 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். சுகன்யாவுக்கு தனது பள்ளிப் பருவத் தோழரான ரஞ்சித்குமார் என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. கணவர் இதை கண்டித்ததால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுகன்யா, மார்த்தாண்டத்தில் ரஞ்சித்குமாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்கும், சுதந்திரமாக ஊர் சுற்றுவதற்கும் தங்களின் இரண்டு குழந்தைகளும் தடையாக இருப்பதாக சுகன்யா கருதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாயும் அவரது கள்ளக்காதலன் ரஞ்சித்குமாரும் சேர்ந்து, பிஞ்சுக் குழந்தைகளைக் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். கம்பால் அடித்தும், குழந்தைகளின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்தும் அவர்கள் நிகழ்த்திய இந்தத் மனிதநேயமற்ற செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்திரவதைக்கு ஆளான குழந்தைகளை ஈத்தாமொழியில் உள்ள தனது தம்பி ராஜலிங்கம் வீட்டில் சுகன்யா விட்டுச் சென்றுள்ளார். குழந்தைகளின் உடலில் இருந்த ரத்தக் காயங்களையும் தீக்காயங்களையும் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜலிங்கம், இதுகுறித்து சுகன்யாவிடம் கேட்டபோது, அவர் அலட்சியமாகப் பதிலளித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பின்னர் குழந்தைகள் அழுதுகொண்டே கூறிய தகவைக் கேட்டு உறைந்துபோன ராஜலிங்கம், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின்பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், காயமடைந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். தலைமறைவாக இருந்த சுகன்யா மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
