மராட்டிய மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் சுமார் 105 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நல்துர்க் கோட்டையில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. அஸ்வினி என்ற பெண், தனது மூன்று பிள்ளைகளுடன் கோட்டையின் கொத்தளப் பகுதியில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற சுற்றுலா பயணிகள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்த துயரச் சம்பவத்தில் தாய் அஸ்வினி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்றொரு குழந்தை மீட்கப்பட்டு, மிகக் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஸ்வினியின் தந்தை அளித்துள்ள புகாரில், தனது மகளை அவருடைய கணவரும் மாமியாரும் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதே இந்த முடிவுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
