மான்செரியல் மாவட்டம், தண்டேபள்ளி மண்டலம் லிங்காபூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தாய் ஒருவர் தனது ஆறு வயது மகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சையா என்பவருக்கும், ரஜிதா என்பவருக்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, ரஜிதா கடந்த சில காலமாகத் தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளைப் பார்க்க வந்த கணவருடன் ரஜிதாவிற்கு மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், கணவர் சென்ற சிறிது நேரத்திலேயே தனது 18 மாத மகனை வீட்டிலேயே தூங்க வைத்துவிட்டு, மகள் அக்ஷிதாவைத் தன் இடுப்போடு சேர்த்துச் சுற்றிக் கட்டிக்கொண்டு அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு சற்று முன்பாக, ரஜிதா தனது சகோதரியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது முடிவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
