பெங்களூரு மகாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ரவி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக தனது வாகனத்தை சாலையோரமாகப் பாதுகாப்பாக நிறுத்தினார். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ‘ஹொய்சாலா-88’ காவல் குழுவினர், ரவி ஆபத்தான நிலையில் இருப்பதை கவனித்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து துரிதமாக செயல்பட்ட காவலர்கள், சிறிதும் தாமதிக்காமல் அவருக்கு உடனடியாக சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர். தக்க சமயத்தில் செயல்பட்டு உயிரைக் காத்த காவலர்களின் இந்தச் செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
