பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு குடும்பத்துடன் கிரிக்கெட் போட்டியினைப் பார்த்துவிட்டு, ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பிய நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவர்ணாவின் கணவருக்கு இருக்கும் இதய நோய் மற்றும் மகளின் எதிர்காலம் குறித்த அதீத பயம் மற்றும் மன அழுத்தமே அவரை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காலை கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தனது மகளைத் தலையணையால் அமுக்கிக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், சுவர்ணாவின் சகோதரர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் காவல்துறை இச்சம்பவம் குறித்து இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
