வேலூர் அருகே கட்டிடத் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவி மோனிஷா மற்றும் கள்ளக்காதலன் அன்பழகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 8 ஆண்டுகளுக்கு முன்பு மோனிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெங்களூருவில் கட்டிடத் தொழிலாளியாக கிருஷ்ணமூர்த்தி பணியாற்றி வந்த நிலையில், மோனிஷா மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரமே இந்த பயங்கர கொலைக்கு வித்தாக அமைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த சட்டவிரோத உறவு குறித்து கிருஷ்ணமூர்த்திக்கு தெரியவந்தபோது, அவர் தனது மனைவியை கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து மனைவியைக் கண்காணித்து வந்த கிருஷ்ணமூர்த்தி, மன உளைச்சலில் மதுப்பழக்கத்திற்கும் ஆளாகியுள்ளார். கணவனின் இடையூறால் ஆத்திரமடைந்த மோனிஷா, இது குறித்து அன்பழகனிடம் அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த இருவரும், ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினர்.
சம்பவத்தன்று இரவு, அன்பழகன் கொடுத்த தூக்க மாத்திரைகளை மோனிஷா உணவில் கலந்து கிருஷ்ணமூர்த்திக்கு கொடுத்துள்ளார். உணவைச் சாப்பிட்ட அவர் மயக்க நிலைக்குச் சென்றதும், மோனிஷா தனது கள்ளக்காதலனை வரவழைத்துள்ளார். அதன்படி, நள்ளிரவில் அன்பழகனும் அவரது நண்பர் சுப்பிரமணியும் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்தனர். மோனிஷா வீட்டின் வெளியே காவல் காக்க, உள்ளே சென்ற இருவரும் தூக்கத்திலிருந்த கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை துணியால் இறுக்கிக் கொலை செய்தனர்.
மறுநாள் காலையில் தனது கணவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக மோனிஷா நாடகமாடினார். ஆனால், மகனின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி கிருஷ்ணமூர்த்தியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய மோனிஷா, இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலுக்காக இரண்டு பிஞ்சுக் குழந்தைகளையும் தவிக்கவிட்டு, கணவனைக் கொன்ற மோனிஷா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
