பணம் தர மறுத்த பக்தர்… மூக்கைக் கடித்து மூக்குத்தியைப் பறித்த கொடூரம்…. மதுராவில் பகீர் சம்பவம்….!

By Nanthini on புரட்டாதி 18, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள புகழ்பெற்ற கோவர்தன் பரிக்ரமா பாதையில், பெண் பக்தரைத் தாக்கி அவரது மூக்கைக் கடித்து மூக்குத்தியைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பையைச் சேர்ந்த 32 வயதான மோனிகா ரெய்னா என்ற ஆன்மீகப் பெண், கடந்த ஆறு மாதங்களாக மதுராவில் தங்கி மதச் சடங்குகளில் பங்கேற்று வந்துள்ளார். சம்பவத்தன்று மாலை ராதாகுண்ட் அருகே பரிக்ரமா பாதையில் அவர் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரிடம் யாசகம் கேட்டுப் பணம் கோரியுள்ளார். மோனிகா பணம் தர மறுத்துத் தொடர்ந்து நடந்ததால், அந்நபர் அவரைப் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்யத் தொடங்கியுள்ளார்.

பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த நபர், மோனிகாவைப் பின்தொடர்ந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். ஒருகட்டத்தில் அவரைச் சாலையோரப் புதருக்குள் பலவந்தமாகத் தள்ளிய அந்நபர், அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அத்துடன், மோனிகாவின் மூக்கைக் கடித்ததில் அவருக்கு ஆழமான காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு உண்டானது. வலிதாங்க முடியாமல் துடித்த பெண்ணின் மூக்கிலிருந்த மூக்குத்தியையும் அந்த நபர் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

   

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பக்தர்கள், காயமடைந்த மோனிகாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் மோனிகா அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தாக்குதல் நடந்த இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

   

இச்சம்பவம் குறித்துப் பேசிய மதுரா காவல் துறை அதிகாரி ஷ்லோக் குமார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், தப்பியோடிய நபரை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார். ஆன்மீக மையமான மதுராவில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் அங்குள்ள பக்தர்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.