ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில், 16 வயதேயான கொங்காலா கொன்சிகா சத்யசாகர் மற்றும் ஷீலா அருண் ஆகிய சிறுவன்-சிறுமி ஜோடி கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த சில காலமாக இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு அருணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி ஏற்கனவே பலமுறை வீட்டை விட்டு ஓடிப் போனதும், பின்னர் குடும்பத்தினர் அவர்களை மீட்டு காவல் நிலையத்தில் கவுன்சிலிங் கொடுத்தனுப்பியதும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இன்று இருவரும் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட செய்தி கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடும்பத்தினர், சத்யசாகர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் தற்கொலை கடிதத்தைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் தங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை எனப் பெற்றோர் தெரிவித்த போதிலும், உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அனைத்துக் கோணங்களிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
