பிரயாக்ராஜ் கும்பமேளா மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்தியா முழுவதும் பிரபலமான இந்தூர் இளப்பெண் மோனலிசா (என்கிற மோனி போன்ஸ்லே), தனது காதலரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஃபர்மான் கானை கேரளாவில் வைத்து கரம் பிடித்துள்ளார். மதங்களைக் கடந்து காதலித்த இவர்களது திருமணத்திற்கு இருவீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு நிலவியது. குறிப்பாக, மோனலிசாவின் தந்தை அவருக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க முயன்றதால், பாதுகாப்பு தேடி இந்த ஜோடி கேரளாவுக்குத் தஞ்சம் புகுந்தது.
சினிமா படப்பிடிப்பிற்காக கேரளா வந்திருந்த மோனலிசா, அங்குள்ள போலீசாரிடம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் புகார் அளித்தார். தனது காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த இக்கட்டான சூழலில், கேரளாவைச் சேர்ந்த அரசியல் முக்கியப் பிரமுகர்கள் இவர்களது காதலுக்குப் பச்சைக்கொடி காட்டி, பாதுகாப்பான முறையில் திருமணத்தை நடத்தி வைக்க முன்வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள அருமானூர் ஸ்ரீ நைனார் கோயிலில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், அமைச்சர் வி. சிவன்குட்டி மற்றும் எம்.பி. ஏ.ஏ. ரஹீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். கும்பமேளாவில் பிரபலமடைந்த அந்தப் பெண், சரியாக ‘கும்ப’ மாதத்திலேயே தனது திருமணத்தை முடித்தது ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
