நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டு காலத்திற்குத் தள்ளிப்போடுமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கை நகை சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, திருமணங்கள் உள்ளிட்ட விசேஷங்களுக்குத் தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் இந்தத் திடீர் வேண்டுகோள் காரணமாக, திங்கட்கிழமை பங்குச்சந்தை தொடங்கியவுடன் முன்னணி நகை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 6.4 சதவீதமும், கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் 8.3 சதவீதமும் சரிந்தன. மேலும், சென்கோ கோல்டு மற்றும் ஸ்கை கோல்டு போன்ற நிறுவனங்களின் பங்குகள் 10 முதல் 12 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த தங்கமயில் ஜூவல்லரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்குகளும் 6 சதவீதம் வரை சரிவைக் கண்டன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும் இத்தகைய கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி விளக்கியுள்ளார். இந்த அறிவிப்பால் நகை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
