பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்து கொண்டு, மொபைல் கடை ஒன்றில் புகுந்து 40 ஸ்மார்ட் போன்களை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற விசித்திர விநோதச் சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் லட்சுமன் சென் என்பவருக்குச் சொந்தமான ‘மாதேஷ்வரி மொபைல்ஸ்’ என்ற கடையில் இந்தத் துணிகரத் திருட்டு அரங்கேறியுள்ளது. திங்கட்கிழமை இரவு நேரத்தைப் பயன்படுத்திய திருடர்கள், கடையின் படிக்கட்டுப் பகுதி கதவின் பூட்டை உடைத்து, மேற்கூரை வழியாக உள்ளே புகுந்துள்ளனர்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை கடை உரிமையாளர் லட்சுமன் சென் கடையைத் திறந்தபோது, கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சுமார் 4 முதல் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 முதல் 40 விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் உடனடியாக காவல் துறையினருக்குப் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கடையின் உள்ளேயும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, திருடன் தனது அடையாளத்தை மறைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்து கொண்டு மொபைல் போன்களைத் திருடும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. மேலும், அதே கும்பல் அதே இரவில் ‘சான்வாரியா மொபைல்’ என்ற மற்றொரு கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து திருட முயன்ற காட்சிகளும் சிக்கியுள்ளன. இந்த விசித்திரத் திருட்டு குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகமூடித் திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
