“விஜய்யின் அசுர வேகம்… நடுங்கப் போகும் திராவிடக் கோட்டைகள்”… அந்த 2 ரகசிய எம்.எல்.ஏக்கள் யார் தெரியுமா?… சனிக்கிழமை நடக்கப்போகும் அந்த மெகா ட்விஸ்ட்…!

By Nanthini on ஆனி 17, 2026

Spread the love

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி ஆரம்பித்த இவர்களுக்கு அரசியல் செய்யத் தெரியுமா?” என்று தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும், தற்போதைய அரசியல் நகர்வுகளால் சுக்குநூறாக உடைந்துள்ளன. கடந்த 2024 அக்டோபரில் விஜய் கட்சித் தொடங்கியபோது, திராவிடக் கட்சிகளின் பலமிக்க கட்டமைப்பை வெல்ல முடியாது என்றும், 1967 மற்றும் 1977 போல தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற அவரது கூற்றை வெறும் கேலியாகவும் பார்த்தனர் பலர். சமூக வலைத்தளங்களில் உத்தேச அமைச்சரவை பட்டியல் என்று வெளியான பதிவுகளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்த அரசியல் விமர்சகர்களுக்கு, 2026 தேர்தல் களம் ஒரு புதிய வரலாற்றுப் பாடத்தை எழுதிக் காட்டியுள்ளது.

தேர்தல் முடிவுகளின் ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல தவெக அசுர வேகம் எடுத்து முதலிடத்தைப் பிடித்தது. வேறு எந்தக் கட்சிக்கும் இடம் கொடுக்காத தமிழக மக்கள், 108 இடங்களை வாரி வழங்கி தவெக-வை தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வைத்தனர். அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவோடும், சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்பாராத விதமாக அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றும், விஜய் தலைமையில் தமிழகத்தில் புதிய கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக அரங்கேறியது.

   

ஆட்சி அமைந்த பின்னரும் தவெக-வின் அரசியல் வேகம் குறையவில்லை; மாறாக, தேர்ந்த அரசியல் கட்சிகளைப் போல அடுத்தடுத்து மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் எம்எல்ஏக்களையும் தன்வசம் இழுத்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகிய மாரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யாபாமா, இசக்கி சுப்பையா ஆகிய நான்கு எம்எல்ஏக்கள் தவெக-வில் இணைந்த நிலையில், நேற்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் வரும் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணைய உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தொடர் நகர்வுகள் அதிமுகவின் அடித்தளத்தையே உலுக்கும் நோக்கில் விஜய் எடுக்கும் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

   

தற்போது மேலும் பரபரப்பைக் கூட்டும் வகையில், மேலும் மூன்று எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒருவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்றும், மற்ற இருவர் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, வரும் இடைத்தேர்தலில் தங்கள் சொந்தக் கட்சியின் சின்னத்திலேயே தவெக ஆதரவுடன் போட்டியிடப் போவதாகவும், அதற்கான செலவுகளை தவெக கவனித்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே காலியாக உள்ள தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது முதல் பத்து தொகுதிகளில் இடைத்தேர்தலைச் சந்திக்க தவெக முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், அந்த இரண்டு முக்கிய எம்எல்ஏக்கள் யார் என்ற கேள்விதான் இப்போது தமிழக அரசியலின் உச்சகட்ட ஹாட் டாபிக்.