ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூர் சட்டமன்றத் தொகுதியின் ஆர்.ஜே.டி எம்.எல்.ஏ நரேஷ் பிரசாத் சிங் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காசிதாக் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமத்தில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற அவர், வழியில் உள்ள துரியா ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆற்றில் முழங்கால் அளவு மட்டுமே தண்ணீர் இருந்தபோதிலும், எம்.எல்.ஏ நடந்து செல்லாமல் மனோஜ் ரவிதாஸ் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் நபரின் தோளில் அமர்ந்து ஆற்றைக் கடக்க முயன்றார்.
ஆற்றின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எம்.எல்.ஏ-வைச் சுமந்து சென்ற நபர் கல்லில் வழுக்கி நிலைதடுமாறினார். இதனால், எம்.எல்.ஏ நரேஷ் பிரசாத் சிங் மற்றும் அவரைத் தூக்கிச் சென்ற நபர் ஆகிய இருவரும் ஆற்று நீருக்குள் விழுந்தனர். தண்ணீர் குறைவாக இருந்ததால் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எம்.எல்.ஏ விழுந்த பிறகு மற்றொரு நபர் அவரது காலணிகளைத் தூக்கிச் செல்லும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/ndtvindia/status/2120499307526881643/video/1
இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் அஞ்சு தேவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலித் நபரின் தோளில் அமர்ந்து ஆற்றைக் கடந்தது எம்.எல்.ஏ-வின் மனநிலையைக் காட்டுவதாகவும், துரியா ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற கிராம மக்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்படாததே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். அதேசமயம், அரசியல் ஆதாயத்திற்காகத் தனது வீடியோவின் ஒரு பகுதி மட்டும் திரித்து வெளியிடப்படுவதாக எம்.எல்.ஏ நரேஷ் பிரசாத் சிங் விளக்கமளித்துள்ளார்.
