தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாத காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில், சட்டமன்ற விதிகளின்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான கால அவகாசம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, திராவிடக் கட்சிகள் பாஜகவின் துணையை நாடியுள்ளதாகத் தனியார் இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, மதுரையைச் சேர்ந்த முக்கிய பாஜக பிரமுகர் ஒருவரைத் தொடர்புகொண்ட திராவிடத் தரப்பு, சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர ஆளுநர் மூலமாக அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த ரகசிய அரசியல் நகர்வுக்குப் பிரதிபலனாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவரும் முக்கிய மசோதாக்களுக்குத் தங்களது எம்.பி-க்கள் மூலமாக ஆதரவளிப்பதாகத் திராவிடக் கட்சிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறைந்த பெரும்பான்மை பலத்துடன் தவெக அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை இழுக்கவும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் ஆட்சியை அசைத்துப் பார்க்கவும் எதிர்க்கட்சிகள் பின்னணியில் தீவிர வியூகம் வகுத்து வருகின்றன. கொள்கை முரண்பாடுகளைத் தாண்டி அதிகாரத்திற்காக முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் இந்த ரகசியப் பேரம், வரும் நாட்களில் தமிழக அரசியலில் எத்தகைய அதிரடித் திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை ஒட்டுமொத்தத் தமிழகமும் உற்றுநோக்கி வருகிறது.
