திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் பேரனும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகனுமான திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது சமூக ஊடகங்களின் போக்கு மற்றும் தற்போதைய நாட்டின் அரசியல் சூழல் குறித்து அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளன. ஒரு மாநிலக் கட்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திமுகவின் 75 ஆண்டுகால வரலாற்றையும் அதன் மக்கள் பணியையும் அவர் தனது உரையில் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.
அவர் பேசுகையில், “ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்குப் பல கட்சிகள் காணாமல் போய்விடுகின்றன. ஆனால், 75 ஆண்டுகாலம் கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய கட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காகவே தொடர்ந்து உழைக்கக்கூடிய இயக்கம் இது என்பதால் தான், இன்றும் எத்தனையோ பேர் தங்களை இந்த இயக்கத்தில் பெருமையோடு இணைத்துக் கொண்டு வருகிறார்கள்” என்று கட்சியின் வலிமையை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து தற்போதைய சமூக ஊடகங்களின் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், “இன்றைக்குச் சோசியல் மீடியாக்களைப் பார்க்கிறபோது, கோட் போட்டுக்கொண்டு வந்தாரு, டிஃபன் எடுத்து வந்தாரு, வாட்ச் கட்டியிருந்தாரு, செஸ் விளையாடினாரு, இன்றைக்குப் பட்டுச் சட்டை வேட்டி கட்டிக்கொண்டு வந்தாரு… இதெல்லாம்தான் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால், நாளடைவில் இதெல்லாம் மறைந்து போகத்தான் போகிறது. இந்த ஆடம்பரச் செய்திகளைத் தாண்டி, நாட்டில் நிறைய அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் செய்திகளாக வந்தவண்ணம் உள்ளன” என்று குறிப்பிட்டார்.
இறுதியாக, தற்போதைய தமிழக முதலமைச்சருக்கு நேரடி வேண்டுகோள் விடுத்த மு.க.ஸ்டாலின், “தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியைப் பற்றி வரக்கூடிய செய்திகளைப் படியுங்கள். வெறும் விளம்பரங்களை மட்டும் பார்க்காமல், மக்கள் மத்தியில் எழும் புகார்களையும் செய்திகளையும் படித்து, அதில் இருக்கும் உண்மைகளைக் கண்டுபிடியுங்கள். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் முதலமைச்சருக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள்” என்று தன் உரையை நிறைவு செய்தார்.
