திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட திடீர் நடைபயணப் பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு திரும்பிய முதல்வர், அவிநாசி அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். இந்த எதிர்பாராத நிகழ்வு அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
திமுக சார்பில் இந்தப் போட்டியில் களம் காணும் 26 வயதேயான டாக்டர் கோகிலாமணி, இந்தத் தேர்தலின் இளம் வேட்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவருடன் கைகோர்த்து வீதி வீதியாக நடந்து சென்ற முதல்வர், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களிடம் கோகிலாமணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இளம்பெண்கள், முதியவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் முதல்வருடன் ஆர்வத்துடன் கைகொடுத்ததுடன், போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அவிநாசி தொகுதியைப் பொறுத்தவரை இந்த முறை பலப்பரீட்சை மிக வலுவாக உள்ளது. திமுகவின் இளம் வேட்பாளருக்கு எதிராக, பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கமலியும் களத்தில் இருப்பதால் இங்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. செல்வாக்கு மிக்க மத்திய அமைச்சரை எதிர்த்து ஒரு இளம் பெண் வேட்பாளரை திமுக நிறுத்தியிருப்பது, தொகுதியில் புதுத்தெம்பை உருவாக்கியுள்ளது.
அரசியல் ரீதியாக எல். முருகனை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு வியூகமாகவே இந்த நேரடிப் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாகத் தெரிகிறது. எளிய முறையில் மக்களிடையே இறங்கிச் சென்று வாக்கு சேகரித்ததன் மூலம், தொகுதியின் இளம் வேட்பாளருக்குப் பலமான ஆதரவைத் திரட்ட முதல்வர் முயன்றுள்ளார். இந்தத் திடீர் “சம்பவம்” தேர்தல் களத்தில் திமுகவின் பிரசாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
