தவெகவில் இணையும் திமுகவின் முக்கிய புள்ளி… அழகிரி ஆதரவாளர்கள் திடீர் முடிவு…. அதிர்ச்சியில் அறிவாலயம்…..!

By Nanthini on தை 19, 2026

Spread the love

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகரத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி, ஒரு காலத்தில் தென் மாவட்ட திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார். ஆனால், உட்கட்சிப் பூசல் காரணமாக அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்பட்டனர். தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், தங்களை மீண்டும் கட்சியில் இணைக்க தலைமை ஆர்வம் காட்டாததால் அழகிரி ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சமீபத்தில் மதுரைக்கு வருகை தந்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம், அழகிரியின் தீவிர ஆதரவாளரான மன்னன் உள்ளிட்டோர் தங்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும், திமுக தரப்பிலிருந்து எந்தவித சாதகமான பதிலும் இதுவரை வரவில்லை. குறிப்பாக, திமுகவின் ஒரு முக்கிய ‘வாரிசு’ தலைவர் அழகிரி ஆதரவாளர்களின் வருகையை விரும்பவில்லை என்றும், இதன் காரணமாகவே தலைமை மௌனம் காப்பதாகவும் கூறப்படுகிறது. தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ள திமுக தலைமை காட்டும் இந்த ‘ரெட் கார்டு’ அரசியல் அழகிரி ஆதரவாளர்களை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

   

இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அழகிரி ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான கார்த்திகேயன் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் பல முக்கியப் புள்ளிகள் விஜய்யுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடவும் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.