விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அன்றைய இரவே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். சிறுமி காணாமல் போய் 18 நாட்கள் கடந்த நிலையிலும், அவரைத் தேடும் பணியில் எந்தவிதமான தெளிவான துப்பும் கிடைக்காமல் காவல்துறையினர் தீவிரமாகத் திணறி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வழக்கின் தீவிரத்தன்மை கருதி விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிபிசிஐடி போலீசார் 8 நாட்களுக்கும் மேலாகப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்பட்ட சில குளறுபடிகள் குறித்தும், வழக்கைக் கையாண்ட விதம் குறித்தும் சிபிசிஐடி அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாக, சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டின் கதவை மர்ம நபர் இருமுறை தட்டியதாக மூதாட்டி ஒருவர் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார். அதனடிப்படையில், அந்த வீட்டின் கதவைத் தட்டியது யார் என்பது குறித்துப் போலீசார் தங்களது கவனத்தைத் திருப்பி, அந்த மூதாட்டியிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, ஆலம்பூண்டியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள மேல்மலையனூர் கிராமத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 5 பேரைப் பிடித்து சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். 18 நாட்களாகத் தொடரும் இந்த மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து, சிறுமி ஹேமலதா பத்திரமாக மீட்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் பெரும் ஏக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
