தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த அக்னி முத்து, திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் குடும்பப் பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க இங்கு வந்துள்ளார். அவரது மனுவைப் பெற்றுக்கொண்ட அக்னி முத்து, அதில் இருந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மேலும், வாட்ஸ்அப் மூலம் ஆபாசமான வார்த்தைகளில் குறுஞ்செய்தி அனுப்பி அத்துமீறியதாக அவர் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் தலைமை காவலர் அக்னி முத்துவைத் தொடர்புகொண்டு பேசியபோது, “இதற்கு மேல் இவ்வாறு செய்ய மாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது. இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பெண் புகார்தாரரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தலைமை காவலர் அக்னி முத்துவை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உதவி தேடி வரும் பெண்களிடம் காவல்துறை அதிகாரிகளே இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடந்த மாதமும் இதே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் திலீபன் என்பவர், பெண் காவலர் ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அடுத்தடுத்து ஒரே காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் பெண்கள் தொடர்பான புகார்களில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
