72 உயிர்கள்… 1153 கடைகள் காலி… 11 வயது சிறுவன் செய்த விபரீதம்… கராச்சி தீ விபத்தின் வெளியான அதிர்ச்சி உண்மை…!

By SATHISH R on ஆடி 6, 2026

Spread the love

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்து உலகையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்தில் 72 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 8 பேர் காயமடைந்தனர். முற்றிலும் எரிந்து சாம்பலான இந்த வணிக வளாகத்தின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகளுக்கு ஒரு வாரம் வரை தேவைப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்துள்ள சமீபத்திய குற்றப்பத்திரிகையில், 11 வயது சிறுவன் ஒருவன் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, விபத்து நடந்த அன்று அந்தச் சிறுவன் தன் தந்தை இல்லாத நேரத்தில், அங்குள்ள செயற்கை பூக்கடை ஒன்றை கவனித்து வந்துள்ளான். அப்போது அவன் தீக்குச்சிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததே இந்த பெரும் விபத்திற்குக் காரணம் என்று அவனது நண்பனான 13 வயது சிறுவன் ஒருவன் முக்கிய சாட்சியம் அளித்துள்ளான். இந்த விபத்து ஏற்பட்ட நாள் முதல் அந்தச் சிறுவனும் அவனது தந்தையும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

   

இந்த வழக்கில் மாவட்ட அரசு வழக்கறிஞர் அப்துல் ரசாக் குஜ்ஜார் கூறுகையில், சம்பந்தப்பட்ட சிறுவனுடன் குல் பிளாசா நிர்வாகக் குழு உறுப்பினர்களான தன்வீர் பாஸ்தா, அமர் இஸ்மாயில், முகமது ரமலான் மற்றும் முகமது அமீன் ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மொத்தம் 42 அரசு தரப்பு சாட்சிகளுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில், தீ விபத்தினால் 1,153 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த நீதித்துறை ஆணையத்தின் அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.