மராட்டியம் மாநிலத்தில் பிரசவத்தின் போது உயிரிழந்ததாக நினைத்த குழந்தை மறுநாள் உயிர் பிழைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியம் மாநிலத்தில் பாலிகா குகே என்ற 31 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த ஜூலை 7ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றில் இருந்த 27 மாத குறைமாத குழந்தையை எடுத்தனர். குழந்தை 900 கிராம் எடை மட்டுமே இருந்த நிலையில் பிரசவத்திற்கு பிறகு குழந்தையின் உடலில் அசைவு எதுவும் இல்லை.
குழந்தை அழகும் இல்லை. குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்து கூறினர். மறுநாள் காலை குழந்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குழந்தையை அடக்கம் செய்ய வெள்ளைத் துணியில் குடும்பத்தினர் போர்த்தி வைத்திருந்தனர். அப்போது குழந்தையின் பாட்டி அதை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று கூறிய நிலையில் பாட்டியிடம் குழந்தையை கொடுத்தனர். அப்போது குழந்தையின் உடலில் அசைவு இருப்பதை பாட்டி உணர்ந்த நிலையில் அடுத்த நொடியே குடும்பத்தினர் குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தைக்கு உயிர் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது மருத்துவத்துறையில் ஏற்பட்ட அரிய வகை நிகழ்வு என்றும் இதில் மருத்துவர்களின் கவன குறைவு எதுவும் இல்லை என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்ததாக நினைத்த குழந்தை மறுநாள் உயிர் பிழைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
