தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் திமுகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதேசமயம் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். அதனைப் போலவே பாமக, தேமுதிக, அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.
இதனிடையே விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அவரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை. இப்படியான நிலையில் அரசியலில் விஜய் பிழைக்க வேண்டும் என்றால் உழைக்கும் எங்களோடு இருக்க வேண்டும் என்று கூட்டணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
தனித்து நின்றால் அரசியல் களத்தில் காணாமல் போய்விடுவீர்கள் என்ற அவர், விஜய் இல்லை என்றாலும் ஜெயிப்போம், இருந்தால் கூடுதல் வாக்குகளுடன் ஜெயிப்போம் என்று தெரிவித்துள்ளார். தமிழருவி மணியன் விஜய்க்கு நேரடியாக அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியும் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளது.
