தமிழக டாஸ்மாக் கடைகளில் அடுத்த மாற்றம்…. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு… அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

By Nanthini on வைகாசி 24, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்து மூன்று வாரங்களே ஆகியுள்ள நிலையில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விக்னேஷ், டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ’11 டூ 11′ மனமகிழ் மன்றங்களுக்கு (Clubs) அதிகளவில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருமானம் தனிநபர்களின் கைகளுக்குச் செல்வதாகவும் குற்றம் சாட்டிய அமைச்சர், விதிகளை மீறியுள்ள அனைத்து மனமகிழ் மன்றங்களுக்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எச்சரித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட (MRP) கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் முறைகேட்டை முதல்வர் விஜய் அவர்கள் முழுமையாக எதிர்க்கிறார் என்றும், கூடுதல் விலை வசூலிப்பது சட்டப்படி தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மதுபாட்டில்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் முறையில் உள்ள நடைமுறைப் சிக்கல்களைச் சரிசெய்து, டாஸ்மாக் வருமானம் முழுவதும் அரசுக்கே நேரடியாகச் சென்றடைவதை தவெக அரசு முறைப்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.

   

மது விற்பனை நேரக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். இரவு 10 மணிக்கு மேல் எந்தவொரு டாஸ்மாக் கடையும் இயங்கக் கூடாது என்றும், இந்த விதியை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் ஊழியர்கள் உடனடியாகப் பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். அவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களுக்குப் பதிலாக, தற்போது மூடப்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கு மாற்றுப் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், மூடப்படும் கடைகளைச் சேர்ந்த 2,290 பணியாளர்களுக்கும் எவ்விதச் சம்பளப் பிடித்தமும் இன்றி முழு ஊதியம் வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

   

மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய அமைச்சர், மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக மூடுவது மட்டுமே தீர்வாகாது என்றும், அவ்வாறு செய்தால் கள்ளச்சாராயம் மற்றும் மாற்றுப் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துவிடும் என்பதால் டாஸ்மாக் நிர்வாகத்தை நெறிப்படுத்துவதே முதற்கட்ட நடவடிக்கை என்றும் கூறினார். கள் இறக்குவது தொடர்பான இறுதி முடிவை முதல்வர் விஜய் எடுப்பார் எனத் தெரிவித்த அவர், தமிழகத்தில் சாதி, மத வேறுபாடின்றி தவெக அரசு மக்கள் பணியாற்றும் என்றார். அதோடு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் இந்த அரசு எந்தவித சமரசமும் செய்துகொள்ளாது என்றும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தனது பேட்டியில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.