அரசியல் விமர்சனங்கள் தரம் தாழ்ந்து அவதூறுகளாக மாறுவது ஜனநாயகத்தின் மாண்பைக் குலைப்பதாக உள்ளது என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அமைச்சர் பதவி என்பது மக்கள் சேவைக்கான பொறுப்பே அன்றி, அதிகாரத்தைக் காட்டுவதற்கான அதிகார மமதை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அப்பதவியில் முன்னர் இருந்த ஒருவர் இன்றைக்கு மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நாகரிகமற்றுப் பேசுவது வெட்கக்கேடானது எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக எப்போதுமே ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு மற்றும் மிரட்டல்களையே தனது முதன்மை அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டினார். இறைவனுக்குச் சேவை செய்யும் புனிதமான அறநிலையத்துறையில் பொறுப்பு வகித்த ஒருவர், பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து மாற்றுக் கட்சியினரையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் பேசுவது அவரது உண்மையான அரசியல் தரத்தையே வெளிக்காட்டுகிறது என்றும், இத்தகைய மிரட்டல்களுக்கும் அவதூறுகளுக்கும் தங்களது கட்சி ஒருபோதும் அஞ்சாது என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும், தரக்குறைவான பேச்சுகளுக்கு அதே நிலைக்கு இறங்கிப் பதிலளிப்பது தங்களது அரசியல் பண்பாடு அல்ல என்றும், முதலமைச்சர் தங்களை அவ்வாறு வளர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், “ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு” என்ற அறிவியல் உண்மையை எதிர்த்தரப்பினர் மறந்துவிடக் கூடாது என எச்சரித்தார். அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தாலும், அவதூறுகளையும் மிரட்டல்களையும் தொடர்ந்தால் அதற்கான விலையை அரசியல் களத்திலேயே அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் வார்த்தைகளை அளந்து பேசுமாறு அறிவுறுத்தினார்.
மற்றொரு நிகழ்வில், ஈரோடு மேட்டுக்கடையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியைத் தொடங்கி வைத்த கைத்தறித்துறை அமைச்சர் விஜய்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். மாணவர்களுக்குக் கல்வியைப் போலவே விளையாட்டிலும் முக்கியத்துவம் அளித்து ஒலிம்பிக் அளவில் அவர்களைத் தயார்படுத்துவதே அரசின் நோக்கம் என்று கூறிய அவர், தமிழகத்தில் திமுக தொடர்ந்து எதிர்கட்சியாகவே நீடிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போதைய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதாக விமர்சித்தார்.
