திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவுவதாக எழுந்துள்ள யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். காங்கிரசுக்கும் திமுகவிற்கும் இடையே சுமூகமான உறவு இல்லை எனச் சில ஊடகங்கள் செய்திகளைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட அவர், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை என்றும், அதேபோல் எந்தக் கட்சியும் கூட்டணியை விட்டு வெளியேறப்போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விரைவில் குழு அமைப்பார் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவிப்பது ‘குட்டி கலாட்டா’ போன்றது என்று விமர்சித்த அமைச்சர் ரகுபதி, திமுக கூட்டணியில் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பது கூட்டணி கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும் என்றார். மற்ற இடங்களுக்குச் சென்றால் எவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்காது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளதாகவும், தேர்தல் சமயத்தில் முதல்வர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் அமைச்சர் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருவதாகக் கூறிய அவர், விஜய்யின் அரசியல் வருகை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தான் தெரியும் என்றார். விஜய்யால் மக்களிடம் வாக்குகளைப் பெற முடியாது என்றும், தேர்தல் களத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் கூட வெற்றி பெறுவோம் என்று சொல்வது இயல்பு தான் என்றும் ரகுபதி தனது பேட்டியில் கிண்டலாகத் தெரிவித்தார்.
