தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் நடிகர் டி ராஜேந்தர். அவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் வெள்ளிவிழா கொண்டாடிய படங்களாக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அந்த வகையில் 1984ம் ஆண்டில் வெளியான உயிருள்ள வரை உஷா படம் சூப்பர் ஹிட் படமாக இருந்தது. இந்த படத்தை நாளை 6ம் தேதி ரி ரிலீஸ் செய்ய இயக்குனர் டி ராஜேந்தர் திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி டி ராஜேந்தரின் மகன் நடிகர் சிலம்பரசன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதையொட்டி நடிகர் சிலம்பரசன் சினேகா நடித்த சிலம்பாட்டம் என்ற படத்தை 6ம் தேதி (நாளை) ரி ரிலீஸ் செய்வதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து இயக்குனர் டி ராஜேந்தர் நாளை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த உயிருள்ள வரை உஷா படத்தை வருகிற 13ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். இந்த படம் 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
