தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், எதிர்க்கட்சியான அதிமுகவினரைப் பார்த்து உதிர்த்த நகைச்சுவையான விமர்சனம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஆளுங்கட்சியின் மீதான தனது விசுவாசத்தையும், எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டு தனது உரையை அவர் பதிவு செய்தார்.
முந்தைய ஆட்சியின்போது நடந்த ‘சர்க்கார்’ திரைப்பட சர்ச்சையை அவையில் நினைவு கூர்ந்த அமைச்சர், அதிமுக உறுப்பினர்களைப் பார்த்து, “சர்க்கார் திரைப்படத்தின் பேனரைக் கிழிக்காமல் இருந்திருந்தால் நீங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பீர்கள். அந்த ஒரே ஒரு பேனரைக் கிழித்ததால்தான் இன்று எதிர்க்கட்சியில் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ஒரு திரைப்படத்தின் பேனரைக் கிழித்ததே அவர்கள் ஆட்சியை இழந்தற்குக் காரணம் என அவர் கலாய்த்தது அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தனது உரையை நிறைவு செய்த அமைச்சர் என். ஆனந்த், “எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கள் தலைவர், தளபதிதான். அவர்தான் எங்கள் உயிர், மூச்சு, நாடி எல்லாமே!” என மிகுந்த நெகிழ்ச்சியுடனும் உணர்ச்சிப்பூர்வமாகவும் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் இந்த நகைச்சுவையான பேச்சும், அதற்கு அவையிலிருந்த மற்ற உறுப்பினர்கள் ரசித்துச் சிரித்த நிகழ்வும் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாக ட்ரெண்டாகி வருகிறது.
