தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், குறிப்பாக சாமானிய மற்றும் கிராமப்புறப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், தனது தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இருப்பினும், கடந்த மாதமும் பழைய தொகையான ரூ.1000 மட்டுமே மகளிரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதால், வாக்குறுதி அளிக்கப்பட்ட ரூ.2500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் பெண்கள் மத்தியில் பரவலாக எழுந்தது. இதுகுறித்து விருதுநகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, தற்போது தற்காலிகமாக பழையபடி ரூ.1000 தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார். தகுதியிருந்தும் விடுபட்டவர்கள், கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் மற்றும் ஒரே வீட்டில் இருவர் விண்ணப்பித்தது போன்ற சிறு தொழில்நுட்பச் சிக்கல்களைச் சரிசெய்யும் நீண்ட செயல்முறைகள் நடந்து வருவதால் இதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், முதலமைச்சர் கூறியபடி கண்டிப்பாக அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும் ரூ.2500 உரிமைத் தொகை முழுமையாகச் சென்றடையும் என்பதால் பெண்கள் அனைவரும் அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதியளித்துள்ளார்.
