நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சந்தித்த தோல்வி, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., தற்போது அந்த அந்தஸ்தையும் இழந்து தவிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி வைக்காததே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் குற்றம்சாட்டும் நிலையில், கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளது அ.தி.மு.க.விற்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட முயற்சிப்பதாகக் கூறி அதிருப்தியாளர்கள் வெளியேறி வருவதால், கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த இக்கட்டான சூழலில், கட்சியை மீண்டும் தடம் பதிக்க வைக்கும் நோக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக தீவிர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அண்மையில் செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்த அவர், கட்சியில் பதவி சுகங்களையும் அதிகாரங்களையும் அனுபவித்த சுயநலவாதிகள் மட்டுமே வெளியேறியுள்ளனர் என்றும், உண்மையான அடிமட்டத் தொண்டர்கள் இன்றும் அ.தி.மு.க.வின் பக்கமே உறுதியாக நிற்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டி நிர்வாகிகளுக்குத் தைரியம் அளித்துள்ளார். மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தகுதியானவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படும் என உறுதியளித்து, தொண்டர்களை உற்சாகத்துடன் களப்பணியாற்ற அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் தங்களது களில் ஏற்பட்ட தவறுகளையும் எடப்பாடி பழனிசாமி ஓப்பனாக ஒப்புக்கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே தான் நேரடிப் போட்டி இருக்கும் என்று நினைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வாக்கைக் கணிக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களும் குழந்தைகளும் தங்கள் பெற்றோரை வலியுறுத்தி வாக்களிக்க வைத்ததே த.வெ.க.வின் வெற்றிக்குக் காரணம் என்றார். இந்தச் சவாலை முறியடிக்க, மாவட்டம் தோறும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை உடனடியாகச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்ட நற்பணிகளையும் திட்டங்களையும் புதிய தலைமுறையினரிடம் தீவிரமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.
