முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சென்னை ராஜதானி – மைசூர் ஒப்பந்தத்தில் இருந்த முக்கியமான சட்டப்பிரிவை நீக்கியதே, காவிரி நீர் பெறுவதில் தமிழகத்திற்கு சிக்கல் ஏற்பட முக்கிய காரணம் என மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்ப்பாய உத்தரவை கர்நாடகா மீறினால் அணையின் கட்டுப்பாட்டை ஆணையமே ஏற்கலாம் என்ற விதியை திமுக அரசு இழந்ததால், தற்போது உச்ச நீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டம் நடத்துவதே ஒரே வழி என்று தெரிவித்தார். மேலும், கர்நாடகாவில் எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தருவதில்லை என்பதில் ஒரே மாதிரியாக நடப்பதாகவும், இதற்கு மத்திய அரசின் பிரதிநிதிகளும் ஆதரவாகப் பேசுவது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொய்யான தகவல்களைப் பரப்புவதாகத் தெரிவித்தார். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததாகக் கூறுவது உண்மை அல்ல என்றும், நிர்வாக ரீதியாகத் தானாக முன்வந்து சுழற்சி முறையில் மட்டுமே மின் இணைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். நேற்று ஆய்வு செய்யப்பட்ட 10,000 மின் இணைப்புகளில் வெறும் 50 இணைப்புகளில் மட்டுமே பூட்டிய வீடுகள் காரணமாகக் கட்டண மாற்றம் இருந்ததாகத் தெரிவித்த அவர், கோடைகாலம் முடிவடையும் போது இயல்பாகவே மின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
