கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கொப்பா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 முதல் 6 மணிக்குள் ஒரு சோகமான விபத்து நிகழ்ந்தது. பெங்களூரு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ், அவரது மனைவி காவ்யா மற்றும் இரு மகள்கள் கவுரி கணேச பண்டிகையைக் கொண்டாடிவிட்டு தங்களது ஸ்கூட்டரில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த பால் டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த கொடூர மோதலில் முத்துராஜ் மற்றும் அவரது 9 வயது மகள் கீர்த்தனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த காவ்யா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார். இதனால் குடும்பத்தில் உள்ள மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இவர்களது 12 வயது மூத்த மகள் அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். விபத்தை ஏற்படுத்திய பால் டேங்கர் லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.
https://twitter.com/HateDetectors/status/2099874630530191385/video/1
தகவலறிந்து வந்த கொப்பா காவல்நிலைய போலீஸார், சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடிப் பிடித்து கைது செய்த போலீஸார், வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
