தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.
கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள், நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார்.
அவர் நடிப்பில் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை. இந்த படத்தில் பூர்ணிமா ஜெயராமன் கதாநாயகியாக நடிக்க இளையராஜா இசையமைத்திருந்தார். ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் இருக்கும் அவரை ஒரு பாடகனாக ஆக்குவதுதான் தன்னுடைய கடமை என்று முடிவு செய்வார். அவர் எடுத்த முயற்சியின் காரணமாக தொலைக்காட்சியில் பாடுவதற்கு மோகனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு அவர் மிகப்பெரிய பாடகராக மாறுகிறார். இதனை அடுத்து இருவருக்கும் காதல் வேகமாக வளர்கிறது.
இந்த காதல் திருமணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென மோகனுக்கு புற்றுநோய் என்று தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் இறந்து விடுவோம் என்று தெரிந்தவுடன், தன்னால் பூர்ணிமாவின் வாழ்க்கை கெடக்கூடாது என்பதற்காக அவரை தவிர்ப்பார். இப்போது பார்த்தால் இதெல்லாம் ஒரு திரைக்கதையா என நினைக்கத் தோன்றும் தேய்வழக்கான திரைக்கதையைக் கொண்ட படம்தான். ஆனால் அப்போது அந்த படம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் இளையராஜாவின் அற்புதமான பாடல்களும்தான்.
மோகனுக்கு பல படங்களில் பின்னணிக் குரல் கொடுத்த எஸ் என் சுரேந்தர் முதல் முதலாக அவருக்கு டப்பிங் பேசியது இந்த படத்தில்தான். இந்த படம் வெற்றி பெறவே அந்த கூட்டணி சில ஆண்டுகள் பல படங்களில் இணைந்து பல வெற்றி படங்களைக் கொடுத்தது.
