தமிழ் சினிமாவில் மிகவும் போற்றப்பட்ட நடிகர் MGR. இவருக்கு ரசிகர்கள் அல்ல பக்தர்கள் ஏராளமானவர்கள் உண்டு என்றே சொல்லலாம். நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்து தமிழ்நாட்டையே சிறப்பாக ஆண்டவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே திராவிட கட்சியில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்படி எம்ஜிஆர் அரசியலையும் நடிப்பையும் ஒரே நேரத்தில் சிறப்பாக கவனம் செலுத்தி பணியாற்றி வந்தார். அதனால் ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் திராவிட கட்சியினர் எம்ஜிஆர் சூட்டிங் நடக்கும் இடத்திற்கே வந்து அவரை சந்தித்து விட்டு செல்வர். அப்படி ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு பரபரப்பான சம்பவத்தை பற்றி இனி காண்போம்.
1963ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்து வெளியான திரைப்படம் ‘ஆனந்த ஜோதி’ இப்படத்தை விஎன் ரெட்டி மற்றும் ஏ எஸ் ஏ ராமசாமி இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியவர் ஜாவர் சீதாராமன், பி எஸ் வீரப்பா இப்படத்தை தயாரித்துள்ளார்.
படத்தில் நாயகியாக தேவிகா, எம் ஆர் ராதா, எஸ் ஏ அசோகன், எஸ் வி ராமதாஸ், சிறுவனாக கமலஹாசன், பிஎஸ் வீரப்பா, மனோரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கண்ணதாசன் பாடல் வரிகளுடன் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இப்படத்தில் முக்கியமான காட்சியின் சூட்டிங் நடைபெற்ற நேரம் அது. பி எஸ் வீரப்பா இந்த படத்தில் இன்ஸ்பெக்டராக வருவார். அந்த காட்சியில் எம்ஜிஆரையும் தேவிகாவையும் பி எஸ் வீரப்பா கைது செய்து கொண்டு செல்வது போல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர், தேவிகாவின் கைகளை இணைத்து கை விலங்கு போட்டு வைத்திருப்பர். அந்த கைவிலங்கின் சாவியை படக்குழுவில் இருந்த ஒரு இளைஞன் வைத்திருந்தான். முதல் காட்சி படமாக்கப்பட்ட பின் சாவியை வைத்து கைவிலங்கை திறந்து விட்டனர்.
பின்னர் இரண்டாவதாக அடுத்த காட்சி படமாக்கப்பட்டபோது மீண்டும் கை விலங்கு எம்ஜிஆஆருக்கும் தேவிகாவிற்கும் பூட்டப்பட்டது. படக்காட்சியும் எடுத்து முடித்தாகி விட்டது. ஆனால் கைவிலங்கை கழட்டுவதற்கு சாவி வைத்திருந்த பையனை மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் காணவில்லை. அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. செய்வதறியாது தேவிகாவும் எம்.ஜி.ஆரும் கைவிலங்கோடு நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அந்நேரத்தில் திமுக கட்சியில் இருந்த தலைவர்கள் அவசர வேலையாக எம் ஜி ஆர் ஐ காண சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்திருந்தனர்.

உடனே ஷூட்டிங் ஸ்பாட் பரபரப்பாகி போனது. செய்வதறியாத எம்ஜிஆர் பூட்டப்பட்டிருந்த கை விலங்கோடு சேர்த்து திமுக தலைவர்களை சந்தித்து அனுப்பி வைத்தார். வெகு நேரம் கழித்து சாவி வைத்திருந்த இளைஞன் வந்ததும் அந்த தர்ம சங்கடமான நிலைமை குறித்து பேசி எம்ஜிஆர் கோபப்படாமல் சிரித்துள்ளார் அந்த இளைஞனை அனுப்பியுள்ளார்.
