தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். ஜெயலலிதா, லதா, சாவித்திரி, பத்மினி மற்றும் சரோஜாதேவி என பலருடன் ஜோடி போட்டு நடித்தவர். திரைப்படங்களில் தன்னை தானே ப்ரொமோட் செய்து தன்னைத்தானே புகழ் பாடி மற்றவர்களையும் புகழ வைத்து தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் மாறினார்.
அதிமுக என்ற கட்சியை தொடங்கி தொடர்ந்து 15 வருடங்கள் அதாவது மூன்று முறை முதல்வராக இருந்து சாதனை படைத்தார். எம்ஜிஆர் என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது அவருடைய தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி தான். அது மட்டுமல்லாமல் தங்கம் போல் ஜொலி ஜொலிக்கும் அவரின் நிறமும் அனைவரையும் கவர்ந்து விடும். பொதுவாக எம்ஜிஆர் பாலில் தங்க பஸ்பம் கலந்து சாப்பிடுவார் என்ற கதை பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது தங்க பஸ்பம் சாப்பிடுவதால் தான் எம்ஜிஆரின் நிறம் தங்கம் போல ஜொலிக்கிறது என்று சொல்வார்கள்.
இதற்கு ஒரு மேடையில் விளக்கம் அளித்த எம்ஜிஆர், பலருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. நான் தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவதால் தான் நிறமாகவும் உடல் திடமாகவும் இருப்பதாக நினைக்கிறார்கள். அதில் உண்மை இல்லை. ஒரு குண்டூசி முனையில் தங்கத்தை தொட்டு பாலிலோ அல்லது நெயிலோ கலந்து சாப்பிடுவார்கள். அளவு அதிகமானால் உயிருக்கே ஆபத்தாக முடியும். உடலை பாதுகாப்பது மனதை பொருத்தது. நமக்கு வயதாகி விட்டதே என்று நினைக்காமல் நமக்கு என்ன வயதாகிவிட்டது என்று நினைத்தால் வயோதிகம் நம்மை நெருங்காது. மற்றவர்கள் தான் என் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அது பற்றி நான் கவலைப்படுவது இல்லை என்று எம்ஜிஆர் விளக்கம் அளித்துள்ளார்.