தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.
அதே போல நாடக உலகிலும் அவர் பல இன்னல்களை சந்தித்துள்ளார். எம்ஜிஆர் ஒன்றரை வயது கைக்குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை கோபாலமேனன் இலங்கையில் இறந்து விடுகிறார். அவரது மரணத்திற்குப் பிறகு அந்தக் குடும்பம் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து, கேரளாவுக்கு குடிபெயர்ந்தது. அதன் பின்னர் அங்கும் இருக்க முடியாமல் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டனர்.
அப்படியே நாடக உலகோடு தொடர்பு ஏற்பட்டு சென்னைக்கு வந்தவர் நாடகங்கள் மற்றும் சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அப்படிதான் அவருக்கு சதி லீலாவதி படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்துள்ளது. அதன் பிறகு சிறுசிறு வேடங்களில் சினிமாவில் தலைகாட்டி வந்தார்.
மீரா படத்தில் எம் ஜி ஆருக்கு நல்ல வேடம் ஒன்று கிடைக்க, அதைப் படமாக்க கல்கத்தாவுக்குப் படக்குழு சென்றுள்ளது. அப்போது அங்கு வந்த பாலையாவிடம் எம் ஜி ஆருக்காக ஒதுக்கப்பட்ட வேடத்தைக் கொடுத்துவிட்டு, எம் ஜி ஆருக்கு பாலையாவின் உதவியாள் வேடத்தைக் கொடுத்துள்ளனர். ஆசை ஆசையாக நடிகக் இருந்த நல்ல கதாபாத்திரம் போன விரக்தியில் எம் ஜி ஆர் இருந்துள்ளார்.
இதுபற்றி தன்னுடைய சுயசரிதையில் எழுதும்போது “ஒருவேளை எனக்கு அந்த கதாபாத்திரம் கிடைத்திருந்தால் கூட என்னால் பாலையா அண்ணன் அளவுக்கு அப்போது சிறப்பாக நடித்திருக்க முடியாது” என பதிவு செய்துள்ளார்.
