தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.
இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் தொடக்கத்தில் வில்லன் வேடத்தில் சில படங்களில் நடித்தார். தொடக்கத்தில் அவருக்கு கதாநாயகன் வேடம் எளிதாகக் கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு படங்களும் சொல்லிக்கொள்ளும் படி ஓடவில்லை. அதனால் அவர் சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருக்கவேண்டிய சூழல் உருவானது.

அதன் பின்னர் எஸ் ஏ சந்திரசேகரன், சுந்தர் ராஜான் உள்ளிட்ட இயக்குனர்களோடு கூட்டணி அமைத்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து ரஜினி, கமலுக்கு அடுத்து மூன்றாவது சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்தார்.
80 களில் பல ஆக்ஷன் படங்களில் நடித்த விஜயகாந்த் ஆக்ஷன் காட்சிகளுக்காகவே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இந்நிலையில் எம் ஜி ஆருக்கு பிடித்த விஜயகாந்த் நடித்த படம் எது என்பது விஜயகாந்தே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “எம் ஜி ஆரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். நான் நடிகனாக வளர்ந்து நடித்த போது அதிகமாக அவரோடு பழக்கமில்லை. அவர் மரணத்துக்குப் பிறகு அவருடைய மனைவி வி என் ஜானகியோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவர் என்னிடம் “நீங்கள் நடித்த உழவன் மகன் திரைப்படம் எம் ஜி ஆருக்கு ரொம்ப பிடிக்கும்.

அதில் நீங்கள் மாட்டுவண்டி ஓட்டிகிட்டே பாடிவரும் பாடலை விரும்பி பார்த்தார்” எனக் கூறினார். இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.
எம் ஜி ஆர் காலமாவதற்கு சில மாதங்கள் முன்புதான் விஜயகாந்தின் உழவன் மகன் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
