தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.
அதே போல எந்தவொரு கூட்டத்திலும் தனக்கென்று ஒரு தனிமரியாதை இருக்கவேண்டும், தான் தனித்துத் தெரியவேண்டும் எனப் பார்த்துக்கொள்வார். அரசியலுக்கு வந்த பின்னும், அதற்கு முன்பும் கூட அவர் இந்த இமேஜை தக்கவைத்துக் கொண்டார்.
ஒரு கூட்டத்தில் எம்ஜிஆர் பேசுகிறார் என்றால் அவர்தான் கடைசியாக பேசுவார். அதுதான் தனக்களிக்கப்படும் முக்கியத்துவம் என அவர் கருதுவார். அப்படி ஒரு மேடையில் நடந்த ருசிகரமான சம்பவம் பற்றி பார்க்கலாம்.
எம்ஜிஆரின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது எங்க வீட்டுப் பிள்ளை. அந்த படத்தின் வெற்றிவிழாவின் போது கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு பேசியுள்ளனர். கடைசியாக எம் ஜி ஆர் பேச வந்த போது அவரது குரல் கடைசி வரிசையில் இருப்போருக்கும் கேட்கவேண்டும் என்பதற்காக இரண்டு மைக்குகள் வைக்கப்பட்டுள்ளன.

#image_title
இதைக் கவனித்த அந்த படத்தின் வில்லன் நடிகர் நம்பியார் “இது அநியாயம்… நாங்க பேசும்போது ஒரு மைக் மட்டும் வச்சீங்க. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு மைக்குகளா” என செல்லமாக கோபித்துக்கு கொண்டு கேட்டுள்ளார். இதை சிரித்துக் கொண்டே கேட்ட எம் ஜி ஆர் அவருக்கு சொன்ன பதில் கூட்டத்தாரை சிரிக்க வைத்துள்ளது.
அப்போது எம் ஜி ஆர், நம்பியாருக்கு பதிலளிக்கும் விதமாக “‘படத்தில் எனக்குத்தான் இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு மைக் எனக்கு வச்சிருக்காங்க” எனக் கூற சிரிப்பலை பரவி கைத்தட்டும், விசிலும் பறந்தனவாம். எம்ஜிஆரின் இந்த பதிலைக் கேட்டு நம்பியாரே வாய்விட்டு சிரித்தாராம்.
