என் இமேஜை அப்படியெல்லாம் யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்… பாக்யராஜிடம் கோபித்துக் கொண்ட எம் ஜிஆர்- என்ன காரணம்?

By vinoth on பங்குனி 4, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.

பல வருட போராட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் ஹீரோவானதும் , அதன் பிறகு பெரும்புகழ் பெற்றதும் உலகறிந்த வரலாறு. அவரின் வளர்ச்சிக்கு அவர் திமுகவில் இருந்ததும் ஒரு காரணம். அதுபோல அவரின் திரையுலக வெற்றி திமுகவுக்கும் பயன்பட்டது. கடவுள் பக்தராக இருந்தாலும் திமுகவில் இருந்ததால் எம் ஜி ஆர் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்ல மாட்டார். ஆனால் அவர் வீட்டில் அவர் பூஜை செய்வதுண்டு.

   

எம் ஜி ஆர் வளர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ஆனதும், அதன் பின்னர் அவருடைய படங்களில் எல்லாவற்றையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். பாடல்களுக்கான ட்யூனை ஓக்கே செய்வது முதல் பாடல் வரிகளில் கரெக்‌ஷன் சொல்வது வரை எல்லா முடிவையும் அவர் எடுப்பார் என்று சொல்வார்கள். அதற்கு அவருக்கு சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் இருந்த திறமையும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

   

எம் ஜி ஆர் அரசியலுக்கு சென்ற பின்னர் நடிப்பதை நிறுத்தினார். அப்போது அவர் தன்னுடைய கலையுலக வாரிசு என அறிவித்தது நடிகர் பாக்யராஜைதான். அந்த அளவுக்கு பாக்யராஜ் மேல் அன்பாக இருந்தார் எம் ஜி ஆர். இந்நிலையில் சமீபத்தில் பாக்யராஜ் அளித்த ஒரு நேர்காணலில் எம் ஜி ஆரின் கைவிடப்பட்ட ஒரு படத்தைக் கொண்டு தான் எப்படி ‘அவசர போலீஸ் 100’ படத்தை எடுத்தேன் என்பதைக் கூறியுள்ளார்.

 

அதில் “அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளருக்குப் படம் ரிலீஸாகாததால் 15 லட்ச ரூபாய் வரை நஷ்டம். அதனால் அந்த கதையை வைத்து நான் ஒரு கதை எழுதி தருகிறேன். அதை வைத்து நீங்கள் இப்போதிருக்கும் ஆக்‌ஷன் ஹீரோ யாரையாவது வைத்துப் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன் . இந்த விஷயம் எம் ஜி ஆர் அவர்களின் காதுகளுக்கு செல்ல “என் இமேஜை அப்படியெல்லாம் நான் யாருக்கும் தூக்கிக் கொடுக்க முடியாது. அந்த படத்தை எடுப்பதாக இருந்தால் நீ நடி. இல்லையென்றால் அந்த படமே வேண்டாம் என்றார்” எனக் கூறியுள்ளார்.